2004-10-21

இலங்கை என்பது நம் தாய் திருநாடு

பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் பாடிய பாடலொன்று

இலங்கை என்பது நம் தாய் திருநாடு
எழில் மிகுந்த இயற்கை வளம் நிறைந்த நந்நாடு
மாணிக்க முத்துகளும் மாண்புறு காட்சிகளும்
மனதைக் கவர்ந்திடும் நாடு

நுவரெலியா பகவத்தலா அற்றன் சாமிமலை
தேயிலையாய் பொன் விளையும் பூம்பொழில் சோலை
சிவனொளி பாதமலை தலதா மாளிகையும்
தெரிந்திடும் மாமலை நாட்டில்

யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்
பனைவளமும் புகையிலையும் ஒன்றாக வளரும்
கந்தனின் நல்லூர் கண்டு கடல் வளம் நிறைய உண்டு
கரை வளம் பெருகுது அங்கு

கோணேஸ்வரர் கோயில் கொண்ட திருமலையூரில்
இராவணேசன் ஞாபகமும் வருகுது அங்கே
கன்னியா வெந்நீர் ஊற்றும் கலங்கரை ஒளி விளங்கும்
இயற்கை துறைமுகந்தானே

மீன்பாடும் தேன்நாடு கிழக்கிலே உண்டு
வீரநகர் வன்னியிலே வேளாண்மை உண்டு
மடுமலை நாயகியும் மன்னாரில் பவனி வரும்
மங்காத காட்சியும் உண்டு

சீகிரியா பொலநறுவை அநுராபுரமும்
தம்புல்ல வில்பத்து கதை பல சொல்லும்
கந்தளாய் இனித்திடுதே கல்லோயா மயக்கிடுதே
கண்களால் காண அழைக்குதே

தலைநகராம் கொழும்பின் நாகரிகமும் கண்டு
மின்மினியோ மினிமினயோ காட்சிகள் உண்டு
காணாத புதுமைகளைக் காணலாம் மாநகரில்
பாரீர் கொழும்பு நகரையே