2008-03-28

இசையின் மழையில் நனைந்திடும் நேரம்

வரிகள் - அப்துல்ஹமீத் (இறைதாசன்)
இசை - பயாஸ், இரட்ணம்
குரல் - பொன் சுபாஸ்சந்திரன்



இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுருதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் ´இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்...´ என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.

பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போதுதான் அறிந்து கொண்டேன்